திங்கள், 20 பிப்ரவரி, 2012

கீழைத்தேயவாதம் ஓர் அறிமுகம் (ORIENTALISM)

இஸ்லாம் எதிர்கொண்ட சவால்களில் "கீழைத்தேயவாதம்" (Orientalism) என்பது முக்கியமானது. இஸ்லாத்தின் சகல துறைகளையும் விமர்ச்சனத்துக்குள்ளாக்கி இஸ்லாத்தை நடைமுறைச் சாத்தியமற்றதாக மாற்றி முஸ்லிம்களை இஸ்லாத்தை விட்டும் தூரமாக்குவதே இதன் நோக்கமாக இருந்தது.என்றாலும் இவ்விமர்ச்சனங்களுக்கான தக்க பதில்கள் வழங்கப்பட்டு இஸ்லாம் பாதுகாக்கப்பட்டது.

கீழைத்தேயவாதம் என்பது கீழைத்தேய நாடுகளின் மொழி,வரலாறு,மதம்,நாகரீகம் போன்ற துறைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளைக் குறிக்கும்.இவ்வாய்வுகளை நடாத்தியவர்கள் கீழைத்தேயவாதிகள் எனப்பட்டனர்.பல்வேறு பட்ட நாடுகளையும் இனங்களையும் சேர்ந்த இவர்கள் அறபு,பாரசீக,சீன,இந்திய அறிவியற்துறைகளில் தங்கள் ஆய்வுகளை மேற்கொண்டாலும், குறிப்பாக இஸ்லாமிய நாகரீகம்,வரலாறு, அறபு மொழி,இஸ்லாமியக்கலைகள் என்பவற்றையே அதிகமாக ஆய்வு செய்தனர்.கீழைத்தேயவாதிகளில் பெரும்பாலானோர் கிறிஸ்தவர்களாகவே காணப்படுகின்றனர்.

கீழைத்தேய ஆய்வுகள் என்ற போர்வையில் இஸ்லாத்தை ஆழமாகக் கற்று, இஸ்லாத்தில் சந்தேகங்களை ஏற்படுத்தி,இஸ்லாத்தை வேரோடு பிடுங்கி ஏறிய வேண்டும் என்பதே கீழைத்தேய வாதிகளின் ஆராய்ச்சிகளின் அடிப்படை நோக்கமாகும்.கீழைத்தேய வாதிகளின் இந்த நோக்கத்தை ஒரு கிறிஸ்தவ பிரச்சாரகர் பின்வருமாறு எழுதுகிறார்.

"முஸ்லிம்கள் இஸ்லாத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கையைப் பலவீனமடையச் செய்வதில் எமது பிரச்சாரகர்கள் தோல்வி கண்டுள்ளனர் என்பதில் சந்தேகமில்லை.மேற்கத்திய மொழிகள் வாயிலாகக் கருத்துக்களைப் பரப்புவதன் மூலம் இதனைச் சாதிக்க முடியும்.மேற்கத்திய மொழிகளை முஸ்லிம்கள் மத்தியில் அறிமுகப்படுத்துவதுவதன் மூலம் இதனைச் சாதிக்க முடியும்.மேற்கத்திய மொழிகளை முஸ்லிம்கள் மத்தியில் அறிமுகப்படுத்துவதன் மூலம் ஐரோப்பாவில் பிரசுரிக்கப்படும் சஞ்சிகைகள்,நூல்கள் என்பவற்றோடு முஸ்லிம் உலகிற்கு தொடர்பேறபட வழிபிறக்கும் அது முஸ்லிம்கள் உலோகாயுதத்துறையில் முன்னேற வழிகோலும். அப்போதே இதுவரை முஸ்லிம்களின் தனித்துவத்தையும் சக்தியையும் பாதுகாத்த இஸ்லாமியக் கோட்பாடுகளையும் சித்தாந்தங்களையும் சீர்குலைக்கும் தமது இலட்சியத்தில் கிறிஸ்தவ மிசனரிகள் (Christian Missionaries) வெற்றிகாண முடியும்."

துரதிஷ்டவசமாக 18ஆம் நூற்றாண்டின் இறுதிக்கூறுகளில் இஸ்லாம் அரசியல் சக்தி என்ற வகையில் ஓர் தற்காலிக பின்னடைவை எதிர்நோக்கியது. இந்நிலையை மேற்குலகு மிகக் கவனாமாக கையாள முனைந்தது. இஸ்லாமிய உலகை நோக்கி ஐரோப்பிய கிருஸ்தவ உலகம் படையெடுக்கத் தொடங்கியது. ஐரோப்பிய அரசியல் ஆதிக்கமும் காலனி அடக்குமுறையும் முஸ்லிம் உலகின் மீது படிப்படியாகத் திணிக்கப்பட்டன. ஆப்பிரிக்காவில் அல்ஜீரியா, மொராக்கோ,டியுனீஸியா என்பவை பிரான்சின் கட்டுப்பாட்டிலும், இந்தோனேசியா டச்சுக்காரர்களின் ஆதிக்கத்திலும், எகிப்து பிரிட்டனின் ஆதிக்கத்திலும், துருக்கி ரஷ்யாவின் கட்டுப்பாட்டிலும், லிபியா இத்தாலியின் ஆதிக்கத்திலும் வைக்கப்பட்டன. இக்காலப்பகுதியிலேயே கீழைத்தேயவாதம் (Orientalism) தோற்றம் பெற்றது. ஏகாதிபத்திய சக்திகளின் துணைக் கருவியாக அது செயல்படத் தொடங்கியது.

20ஆம் நூற்றாண்டின் முதற்கூறுகளில் முஸ்லிம் உலகு காலனித்துவத்திலிருந்து முற்றாக விடுதலைப் பெற்றபோதும் கீழைத்தேயவாதத்தின் அறிவியல் அயோக்கியத்தனங்களிலிருந்து விடுதலைப் பெறவில்லை.[றவூப் ஸெய்ன், அறிவை இஸ்லாமியமயப்படுத்தல் கட்டுரைத் தொடர், பயணம் இதழ் 1, பக். 30]

கீழைத்தேயவாதம் தொடர்ந்து ஏகாதிபத்தியத்தின் அடிவருடியாகச் செயல்பட்டு வந்தது. இஸ்லாம் பற்றியும் இஸ்லாமியக் கோட்பாடுகள் பற்றியும் முஸ்லிம்களின் உள்ளங்களில் ஐயங்களை எழுப்பும் வெறும் புனைவுகளை கட்டமைத்து இஸ்லாத்தின் தெய்வீகத் தூய்மையில் கலங்கம் ஏற்படுத்தும் ஆய்வு முயற்சிகளே கீழைத்தேயவாதம் எனப்படுகிறது. கீழைத்தேய ஆய்வாளர்கள் (யூத, கிறிஸ்தவர்கள்) பல்வேறு கருத்து முகாம்களைச் சேர்ந்தவர்கள். பலர் கிறிஸ்தவ பிரச்சார இயக்கத்துடன் தொடர்புபட்டவர்கள். கணிசமானவர்கள் யூத- சியோனிச வலைப்பின்னல்களுடன் இயங்கி வருபவர்கள்.[விரிவான விளக்கத்திற்குப் பார்க்க: றவூப் ஸெய்ன், கீழைத்தேய ஆய்வுகளும் இஸ்லாத்திற்கெதிரான சக்திகளும் அல்-ஜாமியா, இதழ் 02, 1998]

அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் இயங்கிவரும் மத்திய கிழக்குக்கான ஆய்வு மையங்களில் ( Middle East Study Centre) இத்தகைய சியோனிச முகாம்களை ஆதரிக்கும் கீழைத்தேயவாதிகள் பிரதான இடம்வகித்து வருகின்றனர். அமெரிக்காவின் பிரபல வணிகநிறுவனங்களுக்கும் கிறிஸ்தவ பிரச்சார அமைப்புகளுக்கும் இத்தகைய சியோனிசக் குழுக்களுக்குமிடையே நெருங்கிய உறவுகள் இருந்து வருகின்றன. கடந்த பத்து வருடங்களில் அமெரிக்கப் புலமைத்துவ வட்டாரங்களில் நிகழ்ந்துவரும் சம்பவங்கள் இதனை நன்கு வெளிகாட்டுகின்றன.

ஹார்வார்டு பல்கலைக்கழகத்தின் தலைவர் நடஸப்ரன்(Nadawsafran) என்பவரும் அதே பல்கலைக்கழகத்தில் இயங்கிவரும் சர்வதேச உறவுகளுக்கான மையம்(Center for International Relations) பணிப்பாளரான சமுவேல்.பி.ஹண்டிங்டனும் இணைந்து இஸ்லாமிய உலகம் குறித்த ஆய்வொன்றை மேற்கொண்டனர். அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ. வின் வேண்டுகோளின் பேரிலேயே இவ்வாய்வு நடைபெற்றது. பேராசிரியர் ஸப்ரன் இஸ்லாமிய அடிப்படைவாதம் குறித்த மாநாட்டை ஏற்பாடு செய்ய அமெரிக்க மத்திய உளவு நிறுவனம் 45,000 அமெரிக்க டாலர்களை ஒதுக்கியது. இம்மாநாட்டின் கலந்துரையாடலகள் பல்கலைகழகத்தின் வருடாந்திர அறிக்கையாகவும் வெளியானது. (அவ உம்மா)
 எனவே கீழைத்தேயவாதிகளின் அடிப்படை நோக்கம் முஸ்லிம்களை விட்டும் இஸ்லாத்தை தூரப்படுத்துவதே என்பதை இவ்வாசகம் கோடிட்டுக்காட்டுகிறது.(Happy News)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக