ஞாயிறு, 22 ஜனவரி, 2012

தஃவாவும் சகோதர இனத்தவர்களும் (அஷ்ஷெய்க் அகார் முஹம்மத்)

இலங்கையில் இஸ்லாமிய தஃவாவுக்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. இந்நாட்டுக்கு முஸ்லிம்கள் காலடிவைத்த நாள் முதல் இஸ்லாமிய தஃவாவும் காலத்துக்குக் காலம் பல்வேறு அமைப்புக்களில் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளதைக் காணமுடிகின்றது. ஒரு காலத்தில் இங்கு உலமாக்கள், ஷைகுகள் என்றிருந்த தனி மனிதர்கள் இஸ்லாமியப் பணியில் ஈடுபட்டனர். பின்னர் தரீக்காக்கள் எனப்படும் ஆன்மீக அமைப்புக்கள் மூலமாகவும் நல்ல பல பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த சுமார் அரை நூற்றாண்டு காலமாக - உலகின் ஏனைய பாகங்களில் போலவே - இஸ்லாமியப் பிரசாரப்; பணியில் இயக்கங்கள் - ஜமாஅத்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. அவை முனைப்புடன் செயற்பட்டும் வருகின்றன. அவற்றின் முயற்சிகள் பாராட்டத்தக்கவை. தொடர வேண்டியவை.

ஆயினும் இலங்கை தஃவாக்களத்தில் நாம் காணும் ஒரு பெரும் குறை உண்டு. அதுவே பிற சமூகத்தவர்களுக்கும் சமயத்தவர்களுக்கும் இஸ்லாத்தின் தூதை எடுத்துச் சொல்வதில் நாம் கடைப்பிடித்து வந்துள்ள எதிர்மறையான நிலைப்பாடாகும்.

முஸ்லிம்கள் மத்தியில் சன்மார்க்கப் பணியில் ஈடுபடும் எத்தனையோ அமைப்புக்கள் இயங்குகின்றன. ஆனால் இந்நாட்டில் எம்மோடு வாழும் பிற மத சகோதரர்களுக்கு இஸ்லாத்தை எடுத்துச் சொல்வதற்கு காத்திரமான முயற்சிகள் எதுவும் இல்லை என்று சொல்லக்கூடிய அளவுக்கு அத்தகைய பணிகள் மிகவும் அரிதாகவும் குறைவாகவுமே நடைபெறுகின்றன. இதன் பாதகமான விளைவுகளை மறுமைக்கு முன்னர் உலகிலேயே தற்போது நாம் அநுபவிக்கத் தொடங்கியுள்ளோம். இஸ்லாத்தைப் பற்றியும் முஸ்லிம்களைப் பற்றியும் அந்நிய சமூகத்தவர்கள் மிகவும் பிழையான கருத்துக்களைக் கொண்டுள்ளனர். இந்நிலையைப் பயன்படுத்தி இஸ்லாத்தின் எதிரிகளும் சில விஷமிகளும் மேலும் துர்ப் பிரச்சாரங்களைச் செய்து வருகின்றனர்.

எனவே நாம் விட்ட தவறை உணர்ந்து கடமையை அவசரமாக செய்வதற்கு உடன் முன்வரவேண்டிய காலமிது. ஆயினும் இப் பணியை நிறைவேற்றுவதற்கு எவ்வளவு தூரம் எம்மை நாம் தயார்படுத்திக் கொண்டுள்ளோம் என்பது கேள்விக் குறியாகும். ஆழமான சன்மார்க்க அறிவும் பிற சமயங்கள் பற்றிய தெளிவும் மொழியறிவும் இப்பணிக்கு அடிப்படையாகத் தேவைப்படுபவை. குறைந்த பட்சம் இத்தகுதியைப் பெற்ற ஒரு குழுவையாயினும் உருவாக்கும் பொறுப்பு நமக்குண்டு.

இக்கடமையை நாம் காலதாமதமின்றி நிறைவேற்றியாக வேண்டும் இல்லாதபோது பாரதூரமான விளைவுகளுக்கு முகம்கொடுக்க வேண்டியிருக்கும். எல்லாம் வல்ல அல்லாஹ் எமது குற்றங்களை மன்னித்து எம்மை ஈருலகிலும் பாதுகாப்பானாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக