செவ்வாய், 17 ஜனவரி, 2012

இஸ்லாத்தில் வியாபாரமும் அதன் அமைப்புக்களும்

அறிமுகம்

இஸ்லாமிய சட்டமென்பது, இபாதாத், முஆமலாத், ஜினாயாத், ஹுதூத்முதலாம் மனித் வாழ்வின் சகல துறை சார்ந்த நடவடிக்கைகளையும் விளக்குகின்றது.


இபாதாத் தனி மனிதனோடு தொடர்புள்ளதாகவும் அவற்றினால் ஏற்படும் விளைவுகள் பெரும்பாலும் அவனோடு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதாகவும்  அமைந்துள்ளதைக் காணலாம். ஆனால் முஆமலாத் எனும் வார்த்தையால் குறிக்கப்படும் கொடுக்கல்-வாங்கல், தொழில்சார் நடவ்டிக்கைகளைப் பொறுத்தவரையில், அவை தனிமனிதனுடன் மாத்திரமன்றி அவன் வாழும் சமூகத்துடனும் தொடர்புடையதாக இருக்கின்றன. இந்தவகையில் முஆமலாத் பற்றிய விளக்கம் அதி முக்கியத்துவம் பெற்ற ஒன்று என்பதை எவரும் புரிந்து கொள்ளலாம்.

 இஸ்லாத்திலுள்ள வாணிபச் சட்டங்களைஅறியாது வியாபாரத்தில் ஈடுபடுவது ஆபத்தானதாகும். உமர் (ரழி) அவர்கள் சில வேளைகளில் சந்தைக்கு வருகை தந்து தனது சாட்டையினால் சில வியாபாரிகளை அடித்து கீழ் வருமாறு கூறுவாகள். "வர்த்தகச் சட்டங்களைப் பற்றிய விளக்கம் உள்ளவரைத் தவிர மற்றவர்கள் எங்களது சந்தைகளில் வியாபரம் செய்யக்கூடாது; ஏனெனில் அத்தகையோர் விரும்பியோ விரும்பாமலோ வட்டியை உட்கொள்ளவேண்டியிருக்கும்."

உழைப்புக்கான வழிகள் பல. அவற்றுள் இஸ்லாத்தில்வியாபாரத்திற்கு ஒரு தனியிடம் வழங்கப்பட்டுள்ளதைக் காணலாம். மேலும், வியாபாரம் பற்றிய விளக்கங்கள் இஸ்லாமிய சட்டத்தில் விரிவாக இடம்பெற்றுள்ளமையை அவதானிக்க முடியும்.


இஸ்லாத்தில் வியாபாரமும் அதன் அடிப்படைகளும்

வரைவிலக்கணம்;
வியாபாரம் என்பது, பண்டமாற்று அடிப்படையிலோ அன்றி பணத்தைப் பரிவர்த்தனை ஊடகமாகக் கொண்டோ வாங்குவோரும் விற்போரும் பண்டங்களைப் பரிமாற்றிக்கொள்வதைக் குறிக்கும்.

ஷரீஆக் கண்ணோக்கில்:
இஸ்லாமிய சட்ட வழக்கில் வியாபாரமென்பது, வாங்குவோர்-விற்போர் ஆகிய இரு தரப்பினரதும் பரஸ்பர மனத்திருப்தியின் அடிப்படையில் நடைபெறும் பண்டப் பரிவர்த்தனையைக் குறிக்கின்றது. அல்லது அனுமதிக்கப்பட்ட விதத்தில் ஒருவர் பிரதியீட்டைப் பெற்று ஓர் உடைமையை பிறிதொருவருக்குக் கையளிப்பதனைக் குறிக்கும்.

வியாபாரம் இஸ்லாத்தில் பூரண அங்கீகாரத்தைப் பெற்றதாகும்.  "..மேலும் அலாஹ் வயாபாரத்தை அனுமதித்து வட்டியத் தடை செய்துள்ளான்." ( 2: 275 ) என அல்குர்-ஆன் குறிப்பிடுகின்றது.

"உழைப்பில் சிறந்தது கைத்தொழிலும், நேர்மையான வியாபாரமுமாகும்." (அஹ்மத்)

நபியவர்கள், ஸஹாபாக்கள், தாபிஈன்கள் காலம் முதல் இன்றுவரை இஜ்மாவின் மூலம் வியாபாரம் செய்யும் உரிமையை முஸ்லிம் உம்மத் பெற்றுள்ளது. வியாபாரத்துக்கு முக்கியத்துவமளிக்கும் இஸ்லாம் அதனை 'ஃபழ்லுழ்ழாஹ்" - இறைவனின் அருள் என வருணிக்கின்றது. பூமியில் வியாபாரத்துக்காக பயணம் செய்வோரை முஜாஹிதீன்களுடன் இணைத்து அல்குர்ஆன் குறிப்பிட்டுள்ளதைக் காண முடிகிறது,

"வேறுசிலர் அல்லாஹ்வின் அருளைத்தேடி பூமியில் (பல பாகங்களுக்கும்) செல்லவேண்டியிருக்கும் என்பதனையும் மேலும் சிலர் அல்லாஹ்வின் பாதையில் யுத்தம் செய்யவேண்டியிருக்கும் என்பதனையும் (அவன் நன்கு அறிவான்.)" ( 73: 20 )

அல்லாஹ் அல்குர்ஆனில் வியாபாரத்துக்குத் தேவையான வழிவகைகளையும் வசதிகளையும் மனிதனுக்குச் செய்து தந்திருப்பதாகக் கூறித்  தன் அருட்கொடைகளை வெளிப்படுத்துகின்றான்.

"இறைவனுடைய அருளை நீங்கள் தேடிக்கொள்வதற்காக கப்பல், நீரைக் கிழித்துக்கொண்டு செல்வதை  காண்கின்றீர்கள். இதற்கு நீங்கள் அலாஹ்வுக்கு நன்றி செலுத்துங்கள்." ( 35: 12 )

முஃமிங்களைப் பற்றிக் குறிப்பிடும் அல்குர்ஆன்,
"பலர் இருக்கின்றனர்; அவர்களுடைய வர்த்தகமும், கொடுக்கல்-வாங்களும் அவர்கள் அல்லாஹ்வை நினைவுபடுத்துவதிலிருந்தும்; தொழுகையை நிலை நாட்டுவதிலிருந்தும்; ஸகாத் கொடுப்பதிலிருந்தும் அவர்களைத் திருப்பிவிடாது." ( 24: 37 ) என்றுகூறி வியாபாரிகளாக இருந்தாலும் வணக்க வழிபாடுகளில் ஈடுபாடுடையோராக இருக்க வேண்டுமென வலியுறுத்துகின்றது.


வியாபாரத்தின் சிறப்புக்கள்

வியாபாரத்தின் சிறப்புக்கள் பற்றி நபியவர்களும் பல சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டுள்ளதைக் காணலாம்.

# "நாணயமும் வாய்மையும் கொண்ட வியாபாரி மறுமையில் ஷஹீதுகளோடு இருப்பார்." (திர்மிதீ)
#  "நாணயமும் வாய்மையும் கொண்ட வியாபாரி மறுமையில் நபிமார், ஸித்தீக்குகள், ஷஹீதுகளோடு இருப்பார்." (இப்னு மாஜா)

நபியவர்களும் தனது ஆரம்பகால வாழ்க்கையின்போது வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தமையைக் காணமுடிகிறது.நபித்தோழர்களும்வியாபாரிகளாக இருந்துள்ளார்கள்.முஹாஜிர்களில் பெரும்பாலானவர்கள் வியாபாரிகளாகவே இருந்து வந்துள்ளனர்.Eg: அப்துர்-ரஹ்மான் இப்னு ஔஃப் (ரழி), அபூபக்ர் (ரழி), உமர், உஸ்மான் (ரழி)


இஸ்லாமிய வியாபாரத்தின் அடிப்படைகள்

இஸ்லாமிய வியாபாரத்தின் அடிப்படைகள் மூன்றாகும்

1. அல்-ஈஜாப் வல் கபூல் ( அங்கீகாரம்)
அங்கீகாரம் என்பது விற்பவர், தான் குறித்த பொருளை விற்றுவிட்டதனையும் வாங்கியவர் அதனை ஏற்றுக்கொண்டதனையும் வெளிப்படுத்துவதனைக் குறிக்கும். இங்கு விற்போரின் கூற்று அல்-ஈஜாப் என்றும், வாங்குவோரின் கூற்று அல்-கபூல் என்றும் வழங்கப்படுகின்றது.

ஈஜாபும் கபூலும் வார்த்தைகளிலேயே இடம்பெற வேண்டுமென்பதில்லை. அது மரபில்-வழக்கில் உள்ள வேறு ஓர் அமைப்பிலும் இடம்பெற முடியும். எழுத்து மூலம் நடைபெறும் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கை செல்லுபடியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

2. வாங்குவோர், விற்போர்
வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும் வாங்குவோரும் விற்போரும் அதற்குத் தகுதி படைத்தவராக இருத்தல் வேண்டும். இந்தவகையில் பின்வருவோரின் வியாபார நடவடிக்கைகள் செல்லுபடியற்றதாகும்.
Eg:
@ சித்த சுவாதீனமற்றோர்
@ சிறுவர்கள்
@ மந்த புத்தி உடையோர்

# நிர்ப்பந்தத்தின் பேரில் இடம்பெறும் வியாபாரமும் செல்லுபடியற்றதாகும். பிரித்தறியும் ஆற்றல் (தம்யீஸ்) உள்ள சிறுவர்களின் வியாபார நடவடிக்கைகள் அங்கீகரிக்கத்தக்கனவாகும்.

3. வியாபாரப் பண்டம் அல்லது பொருள்
இப்பகுதி பண்டத்தோடு தொடர்பான ஒரு பகுதியாகும். இது தொடர்பான சட்டதிட்டங்களைப் பின்வருமாறு நோக்கலாம்.

வியாபாரப் பண்டத்தைப் பொறுத்தவரையில் அது பின்வரும் ஆறு நிபந்தனைகளைப் பெற்றிருத்தல் வேண்டும்.

1. சுத்தமானதாக இருத்தல்
வியாபாரப் பண்டம் இருக்கவேண்டும் என்பதிலிருண்டு அது அசுத்தமான (நஜீஸ்) பொருட்களை விற்பனை செய்வது கூடாது என்பது தெளிவாகிறது.

"நிச்சயமாக அல்லாஹ்வும் அவனது தூதரும் மதுபானம், இறந்த பிராணிகள், பன்றி, சிலைகள் முதலானவற்றை விற்பனை செய்வதனைத் தடை செய்துள்ளார்கள்." (புஹாரீ)

2. பயனுள்ளதாக இருத்தல்
பிரயோசனமற்ற பூச்சிகள், எலி போன்றவற்றை விற்றல் கூடாது,

3. விற்பவருக்குச் சொந்தமானதாக இருத்தல்
குறித்த பண்டம் விற்பவருக்குச் சொந்தமானதாகவோ அல்லது சொந்தமானவரின் அனுமதியைப் பெற்றதாகவோ இருத்தல் வேண்டும்.

4. பண்டத்தை, வாங்குபவருக்கு ஒப்படைக்கும் சக்தி இருத்தல்
விற்பவரால் வாங்குபவருக்கு ஒப்படைக்க முடியாதவையாக வியாபாரப் பண்டம் இருத்தல் கூடாது. Eg: கடலிலுள்ள மீன்

5. பண்டமும் அதன் விலையும் குறிப்பாக அறியப்பட்டிருத்தல்
இந்த நிபந்தனையின்படி வியாபாரப் பொருளும் அதன் விலையும் தெளிவாக அறியப்பட்டதாக அமைந்திருத்தல் வேண்டும்,

"ஒருவர் ஒரு பொருளைக் கண்களால் பார்க்காமல் வாங்கினால் அதனைப் பார்த்தபினர் (ஏற்கவும்,மறுக்கவும்) அவருக்குச் சுதந்திரம் உண்டு." (தார குத்னீ, பைஹக்கீ)

கட்புலனாகாப் பொருட்களாக இருந்து அவற்றைக் காண்பிப்பது சாத்தியமற்றதாக இருந்தால் அவற்றின் பண்புகள் அறியப்பட்டதாக இருப்பின் அவற்றினை விற்பது ஆகுமானதாகும். இந்தவகையில் புட்டிகளில் அடைக்கப்பட்ட உணவு வகைகள்,மருந்து வகைகள், ஸிலிண்டர்களில் உள்ள Gas போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

6. கையிருப்பில் உள்ளதாக இருத்தல்
இந்த நிபந்தனையின்படி ஒரு பொருளை வாங்கி அதனைப் பொறுப்பேற்காதவரை மற்றெவருக்கும் விற்பது கூடாது.

"நீர் ஒரு பொருளை வாங்கினால் அதனைப் பொறுப்பேற்கும் வரை விற்காதீர்"  (அஹ்மத், இப்னு ஹிப்பான்)


வியாபார உடன்படிக்கைகளுக்கு சாட்சிகள் தேவை என அல்குர் ஆன் கூறுகின்றது.
"நீங்கள் வர்த்தகம் செய்துகொண்டால் அதற்கு சாட்சியை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்." ( 2: 282 )

இக்கட்டளை இது கட்டாயக் கடமை என்பதை உணர்த்தாது. மாறாக வியாபார உடன்படிக்கைக்கு சாட்சிகளை வைத்துக்கொள்வது ஸுன்னாவாகும் என்பதே பெரும்பாலான இஸ்லாமிய சட்ட அறிஞர்களின் கருத்தாகும்.  நபியவர்களின் காலம் முதல் ஸஹாபாக்கள், தாபிஈன்கள் காலம் உட்பட பிற்பட்ட காலங்களிலும் சாட்சிகள் இன்றியே கொடுக்கல்-வாங்கள் நடவடிக்கைகள் இடம்பெற்று வந்துள்ளமை, சாட்சிகள் இருப்பது கட்டாயக் கடமையல்ல என்பதனையே காட்டுகின்றது.

NIE Module



















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக